மேக்கேதாட்டு அணையின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தி, கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்! விவகாரத்தில் டி.கே.சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-
இயற்கையின் நில அமைப்புப்படி காலங்காலமாக பலநாடுகளைக் கடந்து ஓடிவரும் ஆறுகளின் பயன்பாட்டை இப்போது மேலே உள்ள நாடுகள் தடுத்துத் தாங்கள் மட்டுமே பயன்படுத்திக்கொண்டு, கீழே உள்ள நாடுகளுக்குத் தண்ணீர் போவதைத் தடுக்கக்கூடாது என்று பன்னாட்டு ஒப்பந்தங்களும், சட்டங்களும் கூறுகின்றன.
அதேபோன்று, இந்தியாவில் ஓர் ஆற்றின் மேலே உள்ள மாநிலம் அல்லது மாநிலங்கள், கீழே உள்ள மாநிலங்களுக்குத் தண்ணீர் போகாமல் தடுக்கக்கூடாது என்று 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த்தகராறு சட்டம் 1956 கூறுகிறது.
இந்தச் சட்டங்களையும், மனித மாண்புகளையும் மீறி, கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தடுத்து, அம்மாநிலம் ஏகபோகமாக அனுபவித்துக் கொள்கிறது. அத்தோடு நில்லாமல், மழைக்காலங்களில் கர்நாடக அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ள நீரையும் தடுக்க, மேக்கேதாட்டு என்ற கர்நாடக எல்லையில் அணைகட்ட எல்லா ஏற்பாடுகளையும் சித்தரமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. இதன் கொள்ளளவு 66 டிஎம்சி. இதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயில் விரிவான திட்டம் தயாரித்து அடிப்படை வேலைகளில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாட்டுக்குரிய நீரை கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், மேக்கேதாட்டு அணையையும் கட்டி விட்டால், தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு கூட நீர் கிடைக்காது. குறிப்பாக, காவிரி நீர் வரவில்லை என்றால் 22 மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் குடிநீர் இல்லை; 15 மாவட்டங்களில் பாசனம் இல்லை. இதன் காரணமாக, மேக்கேதாட்டு அணையைக் கட்டக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகள் தொடங்கி விட்டதாக கர்நாடகா துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கும் தொடர்ந்திருக்கிறது. இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை கர்நாடக மாநில அரசு தொடங்கி இருப்பது கண்டனத்துக்குரியது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் கவனத்தைத் திசைத்திருப்பி மேக்கேதாட்டு அணைக் கட்டுமான பணிகளுக்கு தடங்கல் இல்லாமல் இந்திய அரசு பார்த்துக் கொள்கிறதோ என்ற வலுவான ஐயம் நமக்கு எழுகிறது. ஏனென்றால், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அதனை சிறிதும் கூட மதிக்காமல், கர்நாடக மாநில அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறுகின்றார் என்றால், அவர்களுக்கு பக்கத் துணையாக ஒன்றிய பாஜக அரசு நிற்கிறதா என்ற ஐயம் எழுகிறது.
எனவே, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக நடைபெற்று வரும் அடிப்படை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, கர்நாடக மாநில அமைச்சர் டி.கே.சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும். மேலும், மேக்கேதாட்டு அணையை கட்டும் முயற்சியை தடுத்தும் நிறுத்தும் வகையில், நாடாளுமன்றத்தில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
