வன்முறை வெடித்த பள்ளி இப்போது திறக்கப்படாது: மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்!

வன்முறை நடைபெற்ற பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை. பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 12ஆம் தேதி 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில் அந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டினர். மாணவியின் மரணம் குறித்து விசாரித்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இன்று சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறி, போலீசார் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் வாகனத்தின் மீது கல்வீசிய போராட்டக்காரர்கள் வாகனத்தை தீ வைத்துக் கொளுத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். கட்டுக்குள் அடங்காத போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, அடித்து நொறுக்கினர். பள்ளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கும், பள்ளிக்கு சொந்தமான டிராக்டர், புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைத்தனர். பள்ளி அறைகள் மற்றும் சமையல் கூடத்திலும் தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் கலவரம் மூண்டது. போலீசார் அங்குள்ள நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் திணறினர்.போராட்டம் நடைபெற்ற இடத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் துரத்தி அடித்தனர். இதனையடுத்து வன்முறை கட்டுக்குள் வந்து அப்பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது.

மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையத்தில் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி முன்பு வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

இதற்கிடையே, மாணவி உயிரிழப்பு விவகாரம் குறித்துப் பேசிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர், தற்போது போலீசார் விசாரணை ஒருபக்கம் நடந்து வருகிறது. காவலர்களுடன் இணைந்து மாவட்டத்திலுள்ள கல்வி அலுவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால், துறை ரீதியாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

வன்முறையைத் தொடந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்ட தகவலில், கள்ளக்குறிச்சி அருகே கலவரம் நடைபெற்ற பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை. பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார். போராட்டம் காரணமாக 4,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.