தாய் தந்தை பாசத்தை மறந்து பறந்துக்கொண்டிருக்கும் அன்புமணி ரத்தகறை குறித்து பேசலாமா?: சேகர்பாபு!

திருப்புவனம் அஜித் குமார் மரணம் குறித்து விமர்சித்திருந்த அன்புமணி ராமதாஸ், “முதல்வர் ஸ்டாலின் அரசு மீது ரத்தக்கறை படிந்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, தாய் தந்தை பாசத்தை மறந்து பறந்துக்கொண்டிருக்கும் இவர் ரத்தகறை குறித்து பேசலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கறையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம். குடும்ப பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் தாய், தந்தை பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் மறந்து, பறந்து கொண்டிருக்கிறார் அன்புமணி. அவர் கரையைப் பற்றிப் பேசலாமா?

திருப்புவனத்தில் ஏற்பட்ட சம்பவம் வருந்தத்தக்கது, வருத்தமளிக்க கூடியது. அது ஏற்றுக் கொள்ள முடியாததும் கூட. பிரச்சனையை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எட்டு கால் பாய்ச்சலில் முதலமைச்சர் எடுத்து வருகிறார். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாராம் வழங்கியுள்ளார். முதலமைச்சரே முன்வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு போவதற்கு முன்கூட்டியே நீதிமன்றம் என்னெல்லாம் சொல்லுமோ அதை அத்தனையும் முதலமைச்சர் செய்து வருகிறார்.

இது சட்டத்தின் ஆட்சி, சாத்தான்களின் ஆட்சி அல்ல. இது போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு முதலமைச்சர் உறுதியோடு இருக்கிறார். காவல்துறையை அன்றைக்கே அழைத்து மாநிலம் தழுவிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி பல்வேறு வழி முறைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி இருக்கிறார். இது ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்று முதலமைச்சர் தெளிவாக கூறியிருக்கிறார். ஜனநாயக அரசு இந்த பிரச்சனை குறித்து எந்தெந்த பிரிவுகளின் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்ய முடியுமோ அத்தனை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த கால ஆட்சியைப் போல் பத்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பது போல் அல்லாமல் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்.

போராட்டங்கள் என்பது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நடத்துவதுதான். எனவே ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் தான் போராட்டங்களை நடத்த காவல்துறை அறிவுறுத்துகிறது. எனவே போராட்டங்களை தடுப்பதாக, அனுமதி மறுப்பதாக சொல்வும் வாதங்களில் நியாயம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.