சின்னசேலம் வன்முறை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: சைலேந்திரபாபு

கள்ளக்குறிச்சி அருகேவுள்ள தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நீதி கேட்கும் வகையில் நேற்று காலை திரண்ட கூட்டம் திடீரென வன்முறையில் இறங்கியது. சம்பந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டு, வாகனங்களை அடித்து நொறுக்கி, வகுப்பறைகளுக்கு தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் பலரும் காயமடைந்தனர். உடனே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-

மாணவி இறந்தது தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது சம்பந்தமான சாட்சிகள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு புலன் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சரியான முறையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. போராட்டம் நடந்த இடத்தில் டிஐஜி தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பெரிய கலவரம் வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 70 பேரை கைது செய்துள்ளோம். கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. டிஐஜி, எஸ்.பி, 50க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. டிஐஜிக்கு காயம் ஏற்பட்ட போதிலும் அளவுக்கு மீறி எந்தவொரு நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. பெரிய அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

மாணவி உயிரிழந்த வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பள்ளியின் தாளாளர் ரவிகுமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் விசாரணைக்கு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பதிலளித்தார். அதாவது, மூன்று நாட்களுக்கு முன்பாகவே வாட்ஸ்-அப் குழு ஒன்று ஆரம்பித்து போராட்டத்திற்கு ஆட்கள் திரட்டப்பட்டுள்ளனர். அப்படியிருக்கும் போது இதை கணிக்க உளவுத்துறை தவறிவிட்டதா? போதுமான போலீசார் இல்லாததால் தான் வன்முறை வெடித்ததா? போலீசார் தரப்பிலேயே பலர் காயம் அடைந்துள்ளனரே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு, இத்தகைய கல்வீச்சு சம்பவங்களில் போலீசாருக்கு காயம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இவ்வளவு வன்முறையான சூழலிலும் பெரிய அளவில் எதிர்வினை ஆற்றாமல் உயிர் சேதாமல் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். அதற்காக அந்த போலீசாரை நாம் பாராட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பல இடங்களில் செக் போஸ்ட் வைத்து தடுக்கப்பட்ட போதிலும் எப்படி இவ்வளவு கூட்டம் கூடியது என்று கேட்கப்பட்டது. அதற்கு, அவர்கள் வந்த பிறகு தான் தெரியவந்தது. இதெல்லாம் விசாரணையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார். பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், காவல்துறையினரை தாக்கியது, சட்டவிரோதமான கூட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் மிஸ்ஸானது பற்றி கேட்கையில், யாரெல்லாம் வன்முறையை முன்னின்று நடத்தினார்கள் என்று தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகள் அனைத்தும் போலீசார் வசம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, இந்த செயலில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 192 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறைனர் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.