ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்!

கடலூர் – செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 2 மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.