தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் கடும் எச்சரிக்கை!

முன் அனுமதியின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவத்தை அடுத்து, பள்ளி வளாகத்தில் இன்று வன்முறை வெடித்தது.
வன்முறையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு, இறந்த மாணவியின் தாயே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அதிரடி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாணவியின் மரணத்தை வைத்து, கனியாமூர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுள்ள வன்முறை சம்பவங்களை கண்டிக்கும் விதத்தில், நாளை(இன்று) முதல் தமிழகம் முழவதும் நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி என அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என்று தமிழ்நாடு தனியாப் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் நந்தகுமார் இன்று அதிரடியாக அறிவி்த்திருந்தார்.

தனியார் பள்ளிகளின் அனைத்து சங்கங்கள் மற்றும் அனைத்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இளங்கோவனும் இதே முடிவை தான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனியார் பள்ளிகள் முன் அனுமதியின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் தனியார் பள்ளிகளின் நிர்வாகம் அரசின் முன் அனுமதியின்றி பள்ளிகளுக்கு தன்னிச்சையாக விடுமுறை அளிக்க கூடாது. அரசின் இந்த எச்சரிகையை மீறி மூடப்படும் தனியார் பள்ளிகள் மீது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தில் உள்ள சக்தி சர்வதேச பள்ளியில் 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். அந்த பள்ளியின் 3-வது மாடியில் இருந்து மாணவி ஸ்ரீமதி விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. குற்றவாளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. மாணவியின் உடற்கூறு ஆய்வு நடந்துள்ளது. அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையில், இன்று (நேற்று) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமூக விரோதிகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி பள்ளிக்குள் புகுந்து பள்ளி வாகனங்களை தீக்கிரையாக்கி இருக்கிறார்கள். ஏறக்குறைய பள்ளிக்கு ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருந்தால் தனியார் பள்ளிகளை எப்படி நடத்த முடியும்?.

தமிழ்நாட்டில் 20 ஆயிரம் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு யார் பாதுகாப்பு தருவார்கள்? அரசே எங்களை கைவிட்டுவிட்டால் யாரிடம் மன்றாடுவது?. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு யார் பாதுகாப்பு?. ஆகவே நாளை (இன்று) முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது. பள்ளிகள் நடக்காது. ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு வழங்குவார்கள். தமிழக அரசு இதில் சுமுக முடிவு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.