மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்!

மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ் கொடுத்துள்ளார். மாணவர்களிடம் அரசியல் பேசவில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு அரசியல் புரிய வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார்.

திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவள விழா ஆண்டின் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

ஜமால் முகமது கல்லூரிக்கு ஏற்கனவே 2006ல் நிறுவன நாள் விழாவிற்கு வந்துள்ளேன். எப்போதும் மாணவர்களால் மட்டுமே கல்லூரிக்கு பேரும், புகழும் கிடைக்கிறது. தமிழ் சமூகத்தை அறிவு சமூகமாக உருவாக்கி புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம். அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் கல்வி பயிலும் வாய்ப்பினை ஜமால் முகமது கல்லூரி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. காந்தி வழி, அம்பேத்கர் வழி, அண்ணா வழி, பெரியார் வழி என்று மாணவர்களுக்கு ஏராளமான பாதைகள் உள்ளன. ஆனால் மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது.

அமைச்சர்கள் கேஎன் நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஜமால் முகமது கல்லூரிகளில் படித்தவர்கள் தான். நாளை உங்களில் ஒருவர் கூட இந்த பட்டியலில் வரலாம், வர வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு என்ற அணியில் மாணவர்கள் அணிவகுக்க வேண்டும். எல்லோரும் ஓரணியில் இருந்தால், தமிழ்நாட்டை யாராலும் வெல்ல முடியாது. அதேபோல் மாணவர்களுக்கு கல்வி தான் நிலையான சொத்தாகும். ஆனால் சமூக அக்கறையும் முக்கியம். மாணவர்களிடம் அரசியல் பேசவில்லை. ஆனால் மாணவர்களுக்கு அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

கல்லூரி நட்பு எப்போதும் தொடர வேண்டும். அது சமுதாயத்திலும் எதிரொலிக்க வேண்டும். கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்காது. அதற்காகவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை கல்வி தான். அதனால் திமுக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. இஸ்லாமியர் சகோதரர்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக திராவிட மாடல் அரசு இருக்கும் என்று உறுதி தருகிறேன். சமூகநீதி போராட்டங்களின் பிரதிபலிப்பு தான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.