நடிகை வரலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு!

நடிகை வரலட்சுமி தன்னுடைய வீடியோ பதிவில், “கொரோனா நம்மை விட்டு இன்னும் அகலவில்லை… எல்லாரும் மாஸ்க் அணியுங்கள். உடல்நலனை பார்த்து கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னையில் பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. எனினும், அரசியல் கட்சி தலைவர்கள் முதல், சாமான்ய மக்கள் வரை, தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.. முதல்வர் ஸ்டாலினுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, இன்றுதான் டிஸ்சார்ஜ் ஆகி வந்துள்ளார்.. சில தமிழக தலைவர்கள் தொற்று அறிகுறி காரணமாக தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சில அறிவுறுத்தல்களையும் தெரிவித்துள்ளார். அதில், “எல்லாருக்கும் குட்மார்னிங். எனக்கு இன்று நல்ல குட் மார்னிங்காக அமையவில்லை. எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணிதல் உள்பட அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டேன். ஆனாலும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். கொரோனா நம்மை விட்டு இன்னும் அகலவில்லை. நடிகர்கள் தயவு செய்து ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மாஸ்க் அணிய வலியுறுத்துங்கள். ஏனென்றால் நடிகர்களாகிய நாம் மாஸ்க் அணிய முடியாது. எல்லோரும் மாஸ்க் அணியுங்கள்” என்று அவர் ஷேர் செய்துள்ள வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.