“அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்து விட்டது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:-
சுங்கச்சாவடிகளில் மட்டுமல்ல டீசல், பெட்ரோல் போடுவதிலேயே கோடிக்கணக்கான ரூபாயை போக்குவரத்துக் கழகம் பாக்கி வைத்துள்ளது. முதல்வர் தான் அரசு போக்குவரத்து கழகத்திற்கு மானியத்தை கொடுத்து, பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் முதல்வரின் வேலை.
நேற்று அம்பாசமுத்திரம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்திய நபர் 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். வள்ளியூரில் மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். தினசரி இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது. இதனை எல்லாம் மறைப்பதற்காக, ஓரணியில் தமிழகம் என்று சும்மா ஒரு பேனரை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று வருகிறார். தமிழகம் இங்கே தானே இருக்கிறது. எதற்காக ஓரணியில் தமிழகம் பயணம்? அதிமுக, பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்து விட்டது. தோல்வி பயம் வந்து விட்டது. இதனால், தமிழகத்திற்கு ஒரு நன்மையும் கிடையாது. நிச்சயமாக 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
முதல்வருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி பேச வேண்டிய கருத்தை தான் பேசியுள்ளார். கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் எதிர்க்கட்சித் தலைவருக்கு இல்லை. மதுரையில் நடந்த முருகன் மாநாட்டின் 6வது நாளில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். திமுக மாநாடு நடத்தினால் டாஸ்மாக்கில் தான் கூட்டம் வரும். முருகன் மாநாட்டில் மாநாடு நடந்து முடிந்தவுடன் இருக்கைகளை அடுக்கி வைத்து விட்டுச் சென்றனர். முருகன் மாநாட்டிற்கு உலகமே பாராட்டி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சாத்தூரில் நடந்த மதிமுக கூட்டத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், “அண்ணன் வைகோ எப்போதும் அதிகம் கோபப்படக் கூடியவர். கூட்டத்தில் இருக்கும்போது சத்தம் போடுவது எல்லா இடங்களிலும் செய்கிறார். பத்திரிகையாளர் தாக்கப்பட்டு இருக்கிறார், உண்மையில் அது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது” என்றார்.
