செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

கிழக்கின் ட்ராய் என அறியப்படும் செஞ்சிக் கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய இராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சோழர் கோயில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை இரயில், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றின் வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து கம்பீரமான செஞ்சி மலைக்கோட்டை இப்பட்டியலில் தற்போது இணைந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கும் அதன் நிலைத்த பண்பாட்டு மரபுக்கும் பெருமிதத் தருணமாக இது அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்தது. இந்தியாவில் செஞ்சி கோட்டை உள்பட 12 மராட்டிய ராணுவ கோட்டைகளை பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.