தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
50 ஆண்டு கால பயணம்: சரோஜாதேவி கன்னடம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உலாவந்து, 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ரசிகர்களால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். இவர் பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார். அதேபோல, வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி.சரோஜாதேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி. இவர்களுக்கு நான்காவது மகளாகப் பிறந்த சரோஜாதேவி,
ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த ‘மகாகவி காளிதாஸா’ என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன. ‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. அதன் பின்னர் 2வது கதாநாயகி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின. அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் ‘ரத்னா’வாக வந்து அலங்கரித்த சரோஜாதேவி, தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவினார்.
எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் தொடங்கித் திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றன. சரோஜாதேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே கல்யாணப் பரிசு படத்தைக் கூறிவிடலாம். ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி.
சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என்று தொடங்கி ‘புதிய பறவை’யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார்.
படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். சரோஜாதேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே. ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர். சரோஜா தேவி, எம்ஜிஆருடன் 26 படங்களிலும, சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.
தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார்.
சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவியின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி: பழம்பெரும் திரைப்பட நடிகை, ‘அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் திருமதி சரோஜாதேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சரோஜாதேவி. எம்.ஜி.ஆருடன், நடிகை சரோஜாதேவி இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. ‘சரோஜாதேவி’ எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றிருந்த நடிகை சரோஜாதேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புமணி ராமதாஸ்: தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படங்களில் நடித்த சரோஜா தேவி கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அனைத்துக் குடும்பங்களுக்கு நன்கு அறிமுகமானவர். மத்திய அரசின் பத்மபூஷன் மற்றும் தமிழக அரசு, ஆந்திர அரசு, கர்நாடக அரசால் வழங்கப்படும் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரேமலதா விஜயகாந்த்: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டனுடன் இணைந்து பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் அம்மாவாக நடித்தவர். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். கலை உலகில் அரசியாக வாழ்ந்தவர்.
அவரது இழப்பு திரை உலகிற்கே ஈடு இணையே இல்லாத இழப்பு, அவர் மறைந்தாலும் காலம் இருக்கும் வரை அவரின் புகழ் நிலைத்திருக்கும். தன்னுடைய நடிப்பு ஆற்றலால் அனைவரையும் கவர்ந்ததோடு தன்னுடைய திறமையையும் நிரூபித்தவர். சரோஜா தேவியின் மறைவு சினிமா உலகிற்கே பேரிழப்பு, அவருடைய ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரையுலகத்தினருக்கும், குடும்பத்தாருக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
செந்தமிழன் சீமான்: தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் திரைக்கலைஞர் அம்மா சரோஜாதேவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தம்முடைய கலைநயமிக்க நடிப்பாற்றலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த அம்மா சரோஜாதேவி அவர்களின் புகழ், அவருடைய காலங்கடந்த காவியப் படைப்புகள் மூலம் என்றும் நிலைத்திருக்கும்.
அம்மா சரோஜாதேவி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன். அம்மா சரோஜாதேவி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
