குடியரசுத் தலைவர் தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்!

நாடாளுமன்ற வளாகத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளன. கூட்டத்தின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாக்குப்பதிவு செய்த நிலையில், அனைத்து எம்.பி.க்களும் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், அனைத்து மாநில பேரவைகளிலும் முதல்வர்கள் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது கட்சி ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்ட முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், இன்று காலை சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
இன்று மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.