கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 108 பேர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 1 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வரும் சக்தி தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவரது பெற்றோர், உற்றார், உறவினர்கள் பள்ளி வளாகத்துக்கு அருகே நேற்று ( ஜூலை 17) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக வெடித்த வன்முறையில் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டதுடன், பள்ளி வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடும் அளவுக்கு நிலை மோசமானது.

மாணவியின் மரணம் குறித்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை போலீசார் 108 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட அனைவைரையும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கொட்டும் மழையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்நிலையில் விழுப்புரம் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி தலைமையிலான குழு கலவரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது. கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு,” மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட்டுள்ளது” என்றார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விழுப்புரம் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவில் விசாரணை அதிகாரியாக திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி நியமிக்கப்பட்டார். இந்த குழு கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது.