ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (ஜூலை 16) சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளதை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி கமல்ஹாசன் பதவியேற்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் நேற்று (ஜூலை 15) அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கமல்ஹாசன், வருகிற 25-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.