இந்த தேர்தலில் எடப்பாடிக்கு நிரந்தரமாக குட் பை சொல்லப் போகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

“தமிழக மக்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு டாட்டா பைபை சொல்லித்தான் வருகிறார்கள். இந்த தேர்தலில் எடப்பாடிக்கு நிரந்தரமாக குட் பை சொல்லப் போகிறார்கள்” என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 பணிகளை திறந்து வைத்து, ரூ.113.51 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தின் மருமகன் என்ற உரிமையில், உங்களில் ஒருவனாக நான் இங்கு வந்திருக்கிறேன். இன்று ரூ.48 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளேன். மழையையும் பொருட்படுத்தாமல் மயிலாடுதுறை மக்கள் என் மீது அன்பு மழை பொழிந்தனர். எடப்பாடி பழனிசாமி தனது 4 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தார்? 2018 ஆம் ஆண்டுடன் ஏழை பெண்கள் திருமண திட்டத்தை நிறுத்தியவர் தான் எடப்பாடி பழனிசாமி. மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்தியவரும் அவர் தான். அவரு எனக்கு டாட்டா பைபை சொல்கிறாராம். 10 தோல்வி பழனிசாமி அவர்களே, 2019 ஆம் ஆண்டில் இருந்து தமிழக மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு டாட்டா பைபை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட் பை சொல்லப் போகிறார்கள். மக்கள் இனி உங்களை ஒரு போதும் நம்பப்போவது இல்லை. உங்கள் கட்சிக்காரர்களே உங்களை தேர்தல் களத்தில் நம்பத் தயாராக இல்லை.

திரைப்படத்தில் ஒரு காமெடி வரும். அதற்கு எல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டாய். அந்த மாதிரி மக்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள். இதை தெரிந்துகொண்டு போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வருவது போல ஒரு பஸ்ஸை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த பஸ்ஸில் இருந்து புகை வரும் மாதிரி, அவர் வாயில் இருந்து பொய்யும், அவதூறுகளும் வந்து கொண்டு இருக்கிறது. மக்கள் உங்களை நம்பத் தயாராக இல்லை. விரக்தியில் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் தமிழக மக்கள் மீதே குற்றச்சாட்டுகளை வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கொச்சைப்படுத்துகிறார். என்ன என்றால் ஆயிரம் ரூபாய்க்கு ஏமாந்து விட்டீர்கள் என்று பேசுகிறார். மக்கள் ஏமாறவில்லை. பாஜகவை நம்பி நீங்கள் தான் ஏமாந்து போய் இருக்கிறீர்கள். உங்கள் சுயநலத்திற்காக, உங்கள் குடும்பத்தினரை ரெய்டில் இருந்து காப்பாற்றுவதற்காக, அதிமுகவை டெல்லியில் போய் அமித்ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டு வந்து இருக்கிறீர்கள்.

தமிழக மீனவர்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. 10 ஆண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பாஜக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்ததா? கச்சத்தீவை தாரை வார்த்த விவகாரத்தில் பாஜக அரசு அரசியல் செய்கிறது. 3,4 கார்கள் மாறி அமித்ஷா வீட்டு கதவை தட்டியது பற்றி, உதயநிதி தான் முதன் முதலில் எடுத்து பேசினார். நீங்கள் அமித்ஷா வீட்டு கதவை தட்டினால் என்ன தவறு என்று வெட்கம் இல்லாமல் கேட்கிறீர்கள். யாருக்காக தட்டினீர்கள், உங்கள் கட்சியை அடமானம் வைக்கத் தானே தட்டினீர்கள். தடுத்து நிறுத்துவார் என்று நம்பிக்கையோடு ஓட்டளித்தனர். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன். உறுதியோடு சொல்கிறேன். அடுத்து அமையப் போவது திராவிட மாடல் ஆட்சி என்று இப்போதே உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.