குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்ததாக ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும், மாநில சட்டப்பேரவைகளில் எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் ஆதரித்துள்ள யஷ்வந்த் சின்ஹாவுக்கு பதிலாக பாஜகவின் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளதாக ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது மொகிம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முகமது மொகிம் கூறியதாவது:-

நாம் காங்கிரஸை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர், ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. மண்ணுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று எனது இதயத்தில் தோன்றியதையடுத்து அவருக்கு வாக்களித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக வேட்பாளர் திரெளபதி ஒடிசா மாநிலத்தில் பிறந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.