2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்: திருச்சி வேலுச்சாமி!

‘2026 சட்​டப்​பேர​வை தேர்​தலில் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும். அதில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 2 பேர் அமைச்​சர்களாக இருப்​பார்​கள்’ என்று காங்​கிரஸ் மாநில செய்​தித் தொடர்​பாளர் திருச்சி வேலு​ச்சாமி கூறி​னார்.

திருச்​சி​யில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்​றும் அரசி​யல் அமைப்பை காப்​போம் விளக்க பொதுக் கூட்​டம் மணப்​பாறை​யில் நேற்று முன்தினம் தினம் இரவு நடை​பெற்​றது. இதில் திருச்சி வேலுச்​சாமி பேசி​ய​தாவது:-

தமிழக முதல்​வ​ராக காம​ராஜர் இருந்​த​போது 1954-ல் பட்​டியல் இனத்​தைச் சேர்ந்​தவரை அறநிலை​யத் துறை அமைச்​ச​ராக்கி வரலாறு படைத்​தார். தமிழகத்​தின் முடிசூடா மன்​ன​னாக முதல்​வ​ராக இருந்​தவர் காம​ராஜர். இரு இந்​தி​யப் பிரதமர்​களை உரு​வாக்​கிய​வர். ஆனால், அவர் உயி​ரிழக்​கும்​போது 100 ரூபாய் கூட அவரிடம் இல்​லை. அவரைத்​தான் வரலாறு பேசுகிறது. கன்​னி​யாகுமரி முதல் காஷ்மீர் வரை‌, அசாமில் இருந்து குஜ​ராத்வரை குறுக்​கும் நெடுக்​கு​மாக தன்பாதத்​தாலேயே அழகு பார்த்த ராகுல்​காந்​தியை பிரதம​ராக்​கி​னால் நமது வாழ்க்கை பாது​காக்​கப்​படும்.

தமிழகத்​தில் காங்​கிரஸும் ஆட்​சிக்கு வரவேண்​டும் என்​பது​ தான் நமது குறிக்​கோள். இதற்கு முன்​னர் எப்​படி வேண்​டு​மா​னாலும் இருந்​திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்​சியின் கவுர​வத்துக்கு இழுக்கு வராத ​நிலையில் நமது கூட்டணி இருக்கும். அடுத்த ஆண்டு தமிழகத்​தில் நடை​பெற உள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி ஆட்சி தான் அமை​யும். அப்​போது காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 2 பேர் அமைச்​சர்​களாக இருப்​பார்​கள். முதலில் தமிழகத்​தில் ஆட்​சிக்கு வரு​வோம். பிறகு மத்​தி​யில் ஆட்சிக்கு வரு​வோம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

தமிழகத்​தில் அதி​முக-​பாஜக கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும் என ஏற்​கெனவே மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறி​யுள்ள நிலை​யில், திமுக கூட்ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் காங்​கிரஸ் கட்​சி​யின் மாநில நிர்​வாகி​யான திருச்சி வேலுச்​சாமி​யும், அடுத்து கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும் என்று கூறி​யிருப்​பது அரசி​யலில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.