திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?: எடப்பாடி பழனிசாமி!

காமராஜர் பற்றி திமுக திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா காமராஜர் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், அவருக்காக அவர் தங்கும் விடுதிகளில் ஏசி வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியதாக திருச்சி சிவா கூறினார். மேலும் காமராஜர் சாகும் தருவாயில், கருணாநிதியின் கையை பிடித்துக் கொண்டு, நீங்க தான் நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக பேசினார்.

காமராஜர் பற்றிய திருச்சி சிவாவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோரும் இதற்கு எதிர்வினையாற்றினர். இந்த நிலையில் திருச்சி சிவாவின் காமராஜர் பற்றிய பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.

பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே? அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?

காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே? இவரே வெடிகுண்டு வைப்பாராம்.. இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின்.. அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று!

ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது! வாழ்க கர்மவீரரின் புகழ்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.