கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டுவிடக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேருந்தில் இருந்து இறங்கி மாட்டு வண்டியை ஓட்டி அங்கு கூடியிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
திமுக செய்யும் தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தையாக உள்ளன. திமுகவிடம் எப்போது கை நீட்டி பணம் வாங்கினீர்களோ, அப்போதே கம்யூனிஸ்ட் கட்சி முடிந்துவிட்டது. மக்கள் பிரச்னைகளை கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில்லை.
பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை, தண்ணீர் வரவில்லை. இதற்கெல்லாம் கம்யூனிஸ்ட் போராடவில்லை. வரலாறு படைத்த கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டுவிடக்கூடாது என நல்லெண்ணத்தில் சொல்கிறேன். திமுகவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்தது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக. இவ்வாறு அவர் கூறினார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் கீரன்குடி பகுதியில் விவசாயிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். வயலில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி நெற்பயிர்களை ஆய்வு செய்த அவர், தொழிலாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘திமுகவை வீழ்த்தவே பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’ என்று தெரிவித்தார்.
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு. ‘தேர்தல் உத்திகளை, தந்திரங்களை வெளியில் சொல்ல முடியாது’ என்று கூறினார்.
ஒருவேளை கூட்டணிக்கு விஜய் இறங்கி வந்தால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
பாஜக அல்லது தவெக – யார் வலிமையான கூட்டணி? என்ற கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், ‘பாஜக தேசிய கட்சி. பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வலிமை இருக்கிறது. எனவே கட்சிகளை ஒப்பிட முடியாது. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.
நாதக, தற்போது திமுக கூட்டணியில் உள்ள விசிக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ‘திமுக அரசை அகற்ற யார் எங்களுடன் கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று தெரிவித்துள்ளார்.
