தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும், அப்போது சித்தாந்த அடிப்படையில் கட்சி வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்படும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட நாளில் இருந்தே, தேர்தலில் வென்றால் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி வருகிறார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பதில் அளித்து வருகிறார். இது தொடர் விவாதமாக நடந்து வருகிறது. இதனிடையே அண்ணாமலை ஒருபடி மேல் சென்று, அதிமுக – பாஜக ஆட்சியை பாஜக ஆட்சி என்றே கூறுவேன் என்று அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அதிமுக – பாஜக தொண்டர்களிடையே இணக்கமாக செயல்பட முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் அண்ணாமலை பேசுகையில், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதை 3 முறை தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றிக் கூற முடியும்? அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறி இருக்கிறார் என்று மீண்டும் பந்தை அதிமுக பக்கம் அனுப்பினார். எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு பயணம் மூலமாக அதிமுகவுக்கு மக்கள் மத்தியிலான செல்வாக்கு திரும்பிய போது, அண்ணாமலை மீண்டும் கூட்டணி ஆட்சி என்று பேசுவது அதிமுகவை பின்னுக்கு இழுப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்னும் சில மாதங்களுக்கு இதே நிலை தொடர்ந்தால், அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துவிடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மறைந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் வி. ரமேஷ் 12-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(சனிக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்று அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசியதாவது:-
சேலம் ஆடிட்டர் ரமேஷ், அரவிந்த் போன்றவர்கள் பாஜகவில் வளர்ந்து வந்த தலைவர்களாவர். இவர்கள் எல்லாம் பெரிய அளவில் வந்துவிடக்கூடாது என்ற நோக்கிலே அவர்களை படுகொலை செய்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவத்தில், அப்போதைய ஆட்சியாளர்கள் குற்றவாளிகளைப் பிடிக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. முதலில் சிலரை குற்றவாளி என்றனர், அதன் பிறகு வேறு சிலரை காண்பித்தனர். பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித்ஷாவிடம் வலியுறுத்தி வழக்குகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாஜக கட்டாயம் ஆட்சிக்கு வரும். அப்போது சித்தாந்த அடிப்படையில் ஆடிட்டர் ரமேஷ் போன்ற தியாகிகளின் மரணத்துக்கு உரிய தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. திமுகவைச் சேர்ந்த சிலர் இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசு உரிய விசாரணைக் குழு அமைத்து சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பத்திரிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து தனது குறைகளைத் தெரிவிப்பது விதிகளுக்கு புறம்பானது என்றாலும், அவருடைய மனக்குமுறலை தெரிவிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார். இந்த பிரச்னையில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக எந்தவித குழப்பமும் இல்லை. அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கூறியது 2026 தேர்தலுக்குப் பிறகு இருக்கலாம் என்றார்.
