“அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி தரம்தாழ்ந்த முறையில் பேசுகிறார். அதற்கு முதுகெலும்பு இருந்தால் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்” என முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு தொடங்கியது. இதில் அந்தக் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சேலத்தில் மாநில மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாநாட்டின் இறுதிநாளில் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும். சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் அதற்கு தயாராகி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் நல்ல ஆரோக்கியமான விவாதமாக இருக்க வேண்டும். நாலாந்தர பேச்சு பேசுவதால் யாருக்கும் பலனில்லை.
அதிமுக 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. எடப்பாடி பழனிசாமி நன்கு அரசியல் தெரிந்தவர். அக்கட்சியின் பொது செயலாளராக உள்ளார். அவர் முதிர்ச்சியான அரசியலை எதிர்பார்க்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிற இடம் தெரியவில்லை. கரைத்து விட்டது என்கிறார். மேலும், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். ரத்தின கம்பள அழைப்பு விடுக்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அவரின் அழைப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலும் நிராகரிக்கிறது.
பாஜகவின் அரசியல் நிலைப்பாடுகளை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா. சுதந்திரமாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் பாஜக கட்டளைக்கு காத்திருக்கிறது. தேர்தல் ஜனநாயக முறைக்கு பாஜக அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. இதை எடப்பாடி ஆதரிக்கிறாரா. தமிழக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 40 தொகுதிகளில், 8 தொகுதிகளை குறைப்பதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. எடப்பாடி இதையும் ஆதரிக்கிறாரா. பாஜக ஆட்சியில் இல்லாத பகுதிகளில் ஒன்றிய அரசு உரிய உதவிகள் செய்வதில்லை. இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட போது கூட தமிழ்நாட்டுக்கு அவர்கள் நிதி கொடுக்கவில்லை. இதை எடப்பாடி ஆதரிக்கிறாரா. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது. இதை எடப்பாடி ஆதரிக்கிறாரா.
தேசிய கல்வி கொள்கையை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா. மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்தி திணிக்கும் நடவடிக்கையை எடப்பாடி ஆதரிக்கிறாரா. சமஸ்கிருத மொழிக்கு ரூ.2,533 கோடி ஒதுக்கிய ஒன்றிய அரசு, தமிழ் மொழிக்கு ரூ.13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியது. இதை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா. பாஜக ஆட்சியை13 மாதங்களில் முடித்தவர் ஜெயலலிதா. இனி பாஜகவுடன் அரசியல் உறவு கிடையாது என்று சொன்னதுடன் மோடியா.. லேடியா என்று கேட்டார். அந்த பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி உறவு கொண்டுள்ளார். உதய் மின் திட்டத்தை ஜெயலலிதா நிராகரித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது உதய் மின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டியதுடன் , அவர்கள் காட்டுகிற இடத்தில் கையெழுத்திட்டார். அதிமுக அரசுக்கு எதிராக தமிழகத்தை காப்போம் என நாங்கள் மேற்கொண்ட முழக்கத்தை இரவலாக பெற்றுக்கொண்டு எடப்பாடி இப்போது பேசுகின்றார் அரசியல் ரீதியான வினாக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் தரம்தாழ்ந்த முறையில் பேசுகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் கேள்விகளுக்கு முதுகெலும்பு இருந்தால் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும். மடியில் கனமில்லை என்றால் அமித்ஷாவின் நிர்பந்தத்திற்கு எடப்பாடி ஆளானது ஏன்.
2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தனித்து ஆட்சி அமைப்போம் என்கிறார். நானும் ரவுடி.. நானும் ரவுடி என்ற சினிமா காமெடி போல எடப்பாடி பழனிசாமி நான்தான் முதல்வர் வேட்பாளர் என்கின்றார். அதிமுக – பாஜக கூட்டணியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருகிறது. எடப்பாடி சொல்வதை ஏற்கமாட்டேன். எங்கள் தலைவர் அமித்ஷா சொல்வதை கேட்போம் என அண்ணாமலை கூறுகிறார். இவரோடு கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி நம்பகமான தலைவர் இல்லை. இந்த கூட்டணி தேறுமா என தெரியவில்லை. திமுக கூட்டணிக்கு எந்த கட்சி வரும், வரவில்லை என்று தெரியாது. கூட்டணியில் சேர்ப்பதா இல்லையா என முடிவு செய்ய வேண்டியது முதல்வர்.
1952 தேர்தலில் இருந்து தமிழகத்தில் கூட்டணி இருக்கிறது. கூட்டணி எல்லாம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. திமுக தலைமையிலான கூட்டணி. 8 வருடமாக நீடித்து வருகிறது. இது கொள்கை அடிப்படையில் உருவான கூட்டணி. அதிமுக என்கிற திராவிட கட்சி அழிவுப் பாதையை நோக்கி, தற்கொலை செய்துள்ளனர். பாழும் கிணற்றில் விழுந்துள்ளனர். அவர்கள் விழுந்தது இல்லாமல் எங்களையும் சேர்த்துக் கொள்ள பார்க்கிறார்கள். எடப்பாடியை முதல்வராக்கியது சசிகலா. அவர்கதி அதோகதியானது. ஓபிஎஸ், எடப்பாடியை ஆதரித்து அவரது ஆட்சியை காப்பாற்றினார்கள். அவர் கதி என்ன ஆனது. தமிழகத்தில் எத்தனை அணிகள் வேண்டுமானாலும் தேர்தல் களத்துக்கு வரலாம். இரண்டு அணிகளை மட்டுமே மக்கள் ஏற்பார்கள் மூன்றாவது அணியை மக்கள் ஏற்கமாட்டார்கள். மக்கள் நல கூட்டணியில் அதை பரிசீலித்து பார்த்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
