கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101.

இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக இருந்தவர். 2019-ஆம் ஆண்டு லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு பொது வாழ்க்கையில் இருந்து அவர் விலகினார். அதன் பின்னர் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வி.அருண் குமாரின் இல்லத்தில் வசித்து வந்தார். அச்சுதானந்தனுக்கு கடந்த ஜூன் 23-ஆம் தேதி மூச்சுத்திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வி.எஸ். மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) கேரளச் செயலாளராக இருந்தவர். 2006-இலிருந்து கேரளத்தின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் மூன்று முறை செயலாற்றியவர் இவர். அந்தக் காலகட்டத்தில் கவியூர் வழக்கு, ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு, கிளிரூர் வழக்கு போன்ற பாலியல் பலாத்கார வழக்குகளின் நீதி விசாரணைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளார். இதற்காகப் பல முறை நீதிமன்றக் கதவுகளைத் தட்டியவர். இதனால், கேரளத்தில் தந்தை ஸ்தானத்தை வி.எஸ். பெற்றார்.

இது மட்டுமல்லாமல் லாட்டரி முறைகேடு, பார் முறைகேடு, மூணாறு ஆக்கிரமிப்பு போன்ற பல பொதுநலப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்தார். தனது இந்த உரத்த செயல்பாட்டால் சொந்தக் கட்சியாலும் பல முறை விமர்சிக்கப்பட்டுள்ளார்.

கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தொண்டரான டி.பி.சந்திரசேகரன் 2012-இல் கொல்லப்பட்டார். நெய்யாற்றின்கரை இடைத்தேர்தல் நேரத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சந்திரசேகரன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்று விமர்சனத்துக்கு ஆளானார் வி.எஸ். அந்தக் கொலையில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் குற்றம்சாட்டப்பட்டனர். கட்சியின் விமர்சனத்துக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் இன்றைய கேரள முதல்வர் பினராயி விஜயன், சந்திரசேகரனைத் ‘துரோகி’ என அழைத்ததைச் சுட்டிக்காட்டி வி.எஸ். பேசியது மீண்டும் விமர்சனத்துக்கு இடமானது.

பினராயியுடனான மோதல் போக்குக்குக் காரணம், கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சித் தலைவராக வி.எஸ். செயல்பட்டதுதான். திருட்டு லாட்டரி ஒழிப்பு, மூணாறு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற பல திட்டங்களைத் தனது ஆட்சிக் காலத்தில் வி.எஸ். நடைமுறைப்படுத்தி உள்ளார். ஐடி பூங்காக்களை அமைத்துள்ளார். கட்சி ஆளாகவும், ஆட்சியாளராகவும் இரு விதமாகச் செயல்பட்டவர் என்ற ஒரே பண்புக்காக வி.எஸ். விமர்சிக்கவும் பாராட்டவும்படுகிறார்.