திமுகவின் ஊழல்தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கிறது. பாஜகவுடன் எந்தக் காலத்திலும் தவெக கூட்டணி அமைக்காது என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெகவின் தேர்தல் மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
பேசி வளர்ந்த திமுக கட்சியில் பேச ஆளில்லை. அதனால் ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர். பெரியார், அண்ணாவின் கொள்கைகளை திமுக என்றைக்கோ விட்டுவிட்டது.
திமுகவின் ஊழல்களால் பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. திமுகவை எதிர்க்கும் தவெக, அதிமுகவை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, சாதாரண குடிமகனாக இருந்த விஜய், பாஜகவுக்கு ஆதரவாக இருந்த அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு, நீட் போராட்டம் என ஒரு சாதாரண குடிமகனாக அதிமுக ஆட்சியை எதிர்த்து வந்தார் . திமுகவின் கொள்ளை ஆட்சியை எதிர்த்த எம்ஜிஆர், பாஜகவை எதிர்த்த ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளோடு தவெக செயல்பட்டு வருவதால், அதிமுக தொண்டர்கள் என்றைக்கோ, தவெகவில் சேர்ந்துவிட்டனர். பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது.
எம்ஜிஆர் அப்போது என்ன குறிக்கோளுடன் கட்சியை தொடங்கினாரோ, ஜெயலலிதா அம்மையார் எந்த குறிக்கோளுடன் அதிமுகவை மீட்டெடுத்தாரோ, அந்த குறிக்கோளின் ஒற்றை நம்பிக்கை நம்முடைய தலைவர் விஜய்தான். இந்த கொள்கை கொண்ட அரசு இல்லாததால்தான் திமுக கடைசி மூன்று தேர்தல்களில் சுலபமாக வெற்றிப்பெற்றிருக்கிறது. ஆனால் இனி அப்படி வெற்றிப்பெற முடியாது. ஏனெனில் உங்களை எதிர்த்து அரசியல் செய்யும் தலைவர்கள், பாஜகவிடம் சரணடைபவர்கள் அல்ல. பாஜகவை கடுமையாக துணிவுடன் எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய்தான். இஸ்லாமிய தோழர்களே! குர்ஆன் மீது ஆணையாக சொல்கிறோம். எங்களுக்கு குரானும் ஒரு கடவுளின் நம்பிக்கைதான். குர்ஆன் மீது ஆணையாக சொல்கிறோம், எந்த காலத்திலும் கூட்டணியும், உறவும் கிடையாது என்பதை அழுத்தமாக இந்த சேலம் மண்ணில் வைத்து சொல்கிறோம்.
கடந்த 1944 சேலம் மண்ணில் பெரியார் தி.கவை எந்த மதவாதத்தை எதிர்த்து உருவாக்கினாரோ, எந்த சாதியவாதத்தை எதிர்த்து உருவாக்கினாரோ, அதே மண்ணில் நாங்கள் முழக்கமிடுகிறோம். இந்த காரணத்திற்காகத்தான் சேலத்தில் நாங்கள் மாநாட்டை உருவாக்கியிருக்கிறோம். நண்பர்களே பெரியார் இறக்கவில்லை. அதை உயிரோடு வைத்திருக்கத்தான் தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இப்போது எங்கள் நோக்கத்தை தெளிவாக்கிவிட்டோமா? ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எங்களுடன் எப்போதோ இணைந்துவிட்டார்கள். எங்கள் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. மக்கள் முதல்வர், முதல்வர் வேட்பாளர் விஜய் மட்டும்தான். அடுத்த நான்கு மாதங்களில் புரட்சியை விஜய் உருவாக்குவார். திமுக கூட்டங்களுக்கு அரசு பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த கூட்டத்திலும் தங்களின் சாதனைகளை பற்றி பேசாமல், தவெகவை எப்படி திட்டுவது என்பது குறித்த பேசிக்கொண்டிருப்பார்கள். அதுதான் திமுக. இவ்வாறு அவர் பேசினார்.
