சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதால் புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்திருந்த வழக்கில், அவருக்கு நான்கு வாரங்களுக்குள் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வெளிநாடு செல்வதற்காகப் பாஸ்போர்ட்டைத் தேடியபோது அது காணாமல் போனது தெரியவந்தது. அந்தப் பாஸ்போர்ட்டை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். அப்போது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைக் காரணம் காட்டி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 15ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும், நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். இந்த நிலையில், இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சீமானுக்குப் புதிய பாஸ்போர்ட்டை நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.