திமுக அரசு 4 ஆண்டுகளாக மக்களைப் பற்றி சிந்திக்காமல், தேர்தல் வருவதால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது:-
அதிமுக ஆட்சியின்போது கொரோனா பரவல், வறட்சி, கஜா புயல் பாதிப்பு இருந்தபோதும் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்து விட்டது. மின் கட்டணம் 67 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. மயிலாடுதுறையில் நேர்மையாகப் பணிபுரிந்த டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் டிஎஸ்பி மன உளைச்சலால் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளார். காவல் துறையில் பணிபுரிவோருக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது, பொதுமக்களின் நிலை என்ன? கடந்த 4 ஆண்டுகளாக மக்களைப் பற்றி சிந்திக்காமல், தேர்தல் வரப்போகிறது என்பதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைக் கொண்டுவந்துள்ளனர். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து, திருமயம், விராலிமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, புதுக்கோட்டையில் விவசாயிகள், வணிகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
