அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தடை!

அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

பாமக நிறு​வனர் ராம​தாஸ், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி ராம​தாஸ் இடையே​யான மோதல் தொடர்ந்து வலுத்து வரும் நிலை​யில் இரு தரப்​பிலும் பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதன் ஒருபகு​தி​யாக ராம​தாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ம் தேதி தமிழக மக்​கள் உரிமை மீட்​புப் பயணத்​தைத் தொடங்​கப்​போவ​தாக அன்​புமணி அறி​வித்​தார். இந்த நடைபயணத்​தால் வடதமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெடும் என்​ப​தால் தடை விதிக்​கக்​கோரி டிஜிபி அலு​வல​கத்​தில் ராம​தாஸ் மனு அளித்​தார்.

எனினும் திட்​ட​மிட்​டபடி நடைபயணத்​துக்​கான ‘உரிமை மீட்​க… தலை​முறை காக்க’ என்ற இலச்​சினையை​யும், ‘ உரிமைப் பயணம் ’ என்ற தலைப்​பில் பிரச்​சார பாடலை​யும் அன்​புமணி வெளி​யிட்​டார். இதன் தொடர்ச்​சி​யாக நேற்று திருப்​போரூரில் நடைபயணத்தை தொடங்​கி​னார். அப்​போது முரு​கன் கோயி​லில் வழி​பாடு நடத்​தி​விட்​டு, அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணி​வித்​தார். இதையொட்டி நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது:-

ராம​தாஸின் வழி​யில் அவரது கனவு​களை நிறைவேற்​றவே நடைபயணம் மேற்​கொள்​கிறேன். மக்​களுக்கு உரிமை தராத திமுக அரசை இந்த நடைபயணம் வீட்​டுக்கு அனுப்​பும். 10 உரிமைகளை முன்​வைத்து நடைபயணம் மேற்​கொள்​கிறேன். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கால்​ஷீட் கொடுத்​து, ஆக்​சன் என்​றதும் முதல்​வர் நடிக்​கிறார். பெண்​களுக்கு ரூ.1,000 கொடுத்​தால் உரிமை கிடைக்​கு​மா. அது டாஸ்​மாக்​குக்​குச் செல்​கிறது. வேளாண் துறை​யில் வளர்ச்சி மைனஸ் 0.12 சதவீத​மாக இருப்​பது வெட்கக்கே​டானது. சுயமரி​யாதை​யுடன் வாழ்​வதற்​கான சமூக நீதியை உரு​வாக்​கு​வோம். இவ்​வாறு பேசி​னார்.

இந்நிலையில் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்த பயணத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்தார். ‘நான்தான் பா.ம.க. நிறுவனர். எனது அனுமதி இல்லாமல் பா.ம.க. கொடியை யாரும் பயன்படுத்த கூடாது. அன்புமணி நடைபயணம் பா.ம.க.வில் மேலும் குழப்பத்தை உண்டாகும்.சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கும் வழிவகுக்கும். எனவே அவருடைய இந்த பயணத்துக்கு போலீசார் அனுமதி வழங்க கூடாது. தடை விதிக்க வேண்டும்’ என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை சுட்டிக்காட்டி அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.