தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.4,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். பிரிட்டன், மாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று இரவு 7.30 மணிக்கு மாலத்தீவில் இருந்து புறப்பட்டு, தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைகிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருப்பதால், பிரதமரை தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் வரவேற்கின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக மூத்த தலைவர்களும் வரவேற்க உள்ளனர். தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை இரவு 8 மணிக்கு மோடி திறந்து வைக்கிறார். பின்னர், ரூ.4,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.
பின்னர், இன்று இரவு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சிக்கு வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் இரவு தங்கும் அவர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் செல்கிறார். அங்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்வான, ஆடித் திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
”
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, “தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் பேரியகத்தின் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். பிரதமர் மோடி எந்தெந்த மாவட்டங்களுக்கு செல்கிறாரோ அங்கெல்லாம் கருப்புக்கொடி காட்டப்படும். தொடர்ந்து தமிழ்நாட்டு நலனை புறக்கணித்து வரும் பிரதமர் மோடி, குறிப்பாக அடுத்த தலைமுறையை உருவாக்கும் பள்ளிக் கல்விக்கு வழங்க வேண்டியை நிதியை தராமல் மறுதலிக்கிறார், கீழடி அகழாய்வின் உண்மையான அறிக்கையை வெளியிட மறுக்கிறது மத்திய அரசு, இதையெல்லாம் கண்டித்து அந்தந்த மாவட்டங்களில் காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி காட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஜூலை 27 ஆம் தேதி தேதி கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடியின் தமிழக வருகையை கண்டித்து மே17 இயக்கத்தின் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
