அமெரிக்காவிலிருந்து இசைஞானி இளையராஜா நாடு திரும்பியுள்ளார்!

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இசைஞானி இளையராஜா 1400க்கும் மேற்பட்ட படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது பல பாடல்கள் காலத்தால் அழியாத அளவிற்கு சிறப்பான பாடல்களாக காணப்படுகின்றன. பலரது வாழ்க்கையில் இந்தப் பாடல்கள் பல சிறப்பான மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. 1970களில் அன்னக்கிளி என்ற படத்தில் துவங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. அவர் 80 வயதை எட்டிய நிலையில், தற்போதும் அவரது உற்சாகம், எனர்ஜி சிறிதும் குறையவில்லை. அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

தொடர்ந்து இந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் பல இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் அவர் இசைக் கச்சேரிக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ளார். அவர் சமீபத்தில் ராஜ்யசபா நியமன எம்பியாக நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

வானதி ஸ்ரீனிவாசன், பாரதிராஜா மற்றும் கங்கை அமரன் உள்ளிட்டவர்கள் அவரை விமானநிலையத்தில் வரவேற்று எம்பி நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏராளமான பாஜகவினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.