செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கேட்டு கருத்தரங்கம்: வேல்முருகன்!

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் கருத்தரங்கிற்கு பேராதரவை அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் கூறியுள்ளதாவது:-

தமிழீழத்தில் அரங்கேறிய தமிழினப் படுக்கொலைக்கு சான்றாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் கருத்தரங்கிற்கு, தமிழீழ ஆதரவாளர்களும், தமிழின உணர்வாளர்களும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் தங்களின் பேராதரவை அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்!

சிங்களப் பேரினவாத அரசால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதற்கு, செம்மணி மனித புதைகுழிகள் சாட்சியாக உள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரையில் 90 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு, அதில் 81 எலும்புக்கூடுகள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, தாயும் குழந்தையும் கட்டி அணைத்தபடி மடிந்த எலும்புக்கூடுகளின் காட்சி, தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வெறிப்பிடித்த சிங்களப் பேரினவாத அரசின் மீதான கோபத்தையும் அதிகரித்திருக்கிறது.

பள்ளிச்சிறுவர்களின் புத்தகப் பை, பொம்மையோடு கண்டறிந்த அகழாய்வு, பௌத்த சிங்களப் பேரினவாத அரசின் கொடூர முகத்தை வெளிக்காட்டியிருக்கிறது.

தமிழீழத்தில் அரங்கேறிய தமிழினப் படுக்கொலைக்கு, செம்மணி மனிதப் புதைகுழிகளே சாட்சியாகும். ஆனாலும், இன்னும் இதுபோன்ற தோண்டப்படாத அகழாய்வுகள் இன்னும் எத்தனையோ உள்ளன.

இத்தகைய சூழலில், தமிழீழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் போராட்டங்களையும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அப்போராட்டங்களின் தொடர்ச்சியாக, ஈழ மண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, தமிழ்நாட்டில் நாம் என்ன செய்யப் போகிறோம்? என்ற மாபெரும் கருத்தரங்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கிறது.

இக்கருத்தரங்கு நாளை 27.07.2025 அன்று, மாலை 3 மணி முதல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிடி.தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் திரு.த.செ.மணி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான தோழர் திரு.சி.மகேந்திரன் அவர்களும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.கோவை ராமகிருஷ்ணன் அவர்களும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் திரு.தியாகு. அவர்களும் பங்கேற்று கருத்துரை வழங்க உள்ளார்கள்.

எம் தமிழின ஈழச்சொந்தங்களுக்கு நீதி கேட்டு முன்னெடுக்கப்படும் இக்கருத்தரங்கில், தமிழின அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.

எம் தமிழின ஈழச்சொந்தங்கள் பட்ட அவலத்தையும், துயரத்தையும், சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் நடைபெறும் இம்மாபெரும் கருத்தரங்கிற்கு, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் உறுதுணையாக நிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.