லட்சியக் கூட்டமா? ரசிகர் கூட்டமா? இதுதான் சண்டை: சீமான்!

லட்சியக் கூட்டமா? ரசிகர்கள் கூட்டமா? இதுதான் சண்டை என்று கூறியுள்ள சீமான், மறைமுகமாக தவெக தலைவர் விஜய்க்கு எதிராகப் போரை அறிவிப்பதாகப் பேசி இருக்கிறார்.

கடந்த சில நாட்களாக தவெக தங்களின் கொள்கைகளை பேசியது மகிழ்ச்சி என்று கூறி வந்த சீமான், திடீரென விஜயை அட்டாக் செய்து வருவது விவாதமாகி இருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின், முதல் ஆளாக வரவேற்றது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான். எனது தம்பி என்று விஜய்க்கு ஆதரவாகப் பேசி வந்த அவர், திடீரென பெரியாருக்கு பேனர் வைத்த பின் கொந்தளிக்க தொடங்கினார். இதனால் விஜயுடன் கூட்டணி வைத்து இணைந்து செயல்பட முடியாது என்றும் தெரிவித்தார்.

இதன்பின் விஜயை பெரியளவில் சீமான் சீண்டவில்லை. அண்மையில் மு.க.முத்து மறைவுக்குப் பின் முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து சீமான் மற்றும் நாதக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்தனர். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் பகுதியில் நாதக சார்பாகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், கொள்கைக்கு, லட்சியத்திற்கு எதிராக யார் வந்தாலும் எதிரி தான். இனி பாவம் பார்க்கக் கூடாது. லட்சியக் கூட்டத்திற்கும், ரசிகர் கூட்டத்திற்கும் இடையிலான போர்.. சண்டைதான்.. தமிழ்த் தேசிய இனத்தின் உரிமை கனவைக் கொண்டுள்ள சித்தாந்தமா? அல்லது சினிமாவா? இதுதான் சண்டை.. கொலை வெறியில் இருக்கிறேன். எல்லா வேதனைக்கும் ஒரே மருந்து சாதனை மட்டும்தான். உறவுகள் எனக் கருதி சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து இனி பழகப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தவெக தொண்டர்களை அரசியல் புரிதலற்ற சினிமா ரசிகர்கள் என்றும் சீமான் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

தவெக கடந்த சில மாதங்களாக நகரம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் வளர்ந்து வருவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜயின் அரசியல் வருகை சீமானின் வாக்கு சதவிகிதத்திற்கு பிரச்சனை கொடுக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. இதனைப் புரிந்து கொண்டு சீமான் நேரடியாக விஜயை விமர்சிக்கத் தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேபோல் விஜயை சமாளிக்க திமுக தரப்பு சீமானை பயன்படுத்தி கொள்வதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் கூற தொடங்கி இருக்கின்றனர்.