திருச்சி, ஈரோட்டுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புக் குழு. காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து. கடந்த மாதம் ஜூன் 29 ஆம் தேதி மாலையில், தனது உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக நிரம்பியது. அதன்பிறகு மீண்டும் கடந்த 5 ஆம் தேதி, 20 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், மீண்டும் அணையின் அதிகபட்ச உயரமான 120 அடியை எட்டியது நீர்மட்டம். மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வெளியேற்றப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 45,000 கன அடியில் இருந்து 60,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதனால், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 60,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கோரிக்கையின்படி, அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட 2 பேரிடர் மீட்புக் குழுக்கள் திருச்சி, ஈரோடு மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரைப் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகளை பேரிடர் மீட்புக் குழுவினர் மேற்கொள்ள இருக்கின்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு நேற்றிரவு 35,400 கன அடியாகவும், இன்று காலை 45,400 கன அடியாக இருந்த நிலையில் மதியம் 12 மணிக்கு 60,400 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 60,000 கன அடியிலிருந்து 75,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 18,000 கன அடியும், 16 கண் மதகு வழியாக 57,000 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கன அடியாக திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 75,000 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,00,000 கன அடி வரை திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவேரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
