செம்மணி புதைகுழி விவகாரத்தை நான் உலகிற்கு வெளிகொண்டு வந்தது 1998: வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்த போது, செம்மணி புதைகுழி விவகாரத்தை நான் உலகிற்கு வெளிகொண்டு வந்தது 1998 என்று கூறினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “பிரதமர் மோடி இந்தியா முழுக்கவும் தான் செல்கிறார். உலகெங்கும் கூட பல நாடுகளுக்கு இடைவிடாமல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதேபோலத் தான் தமிழகத்திற்கு வந்துள்ளார். இதில் முக்கியத்துவம் எதுவும் இல்லையே” என்று அவர் தெரிவித்தார்.

அப்போது தமிழகத்தில் 8 இடங்களில் குறிவைத்துத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாகச் சொன்னீர்களே என்ற கேள்விக்குச் சட்டென அவர், “நான் அப்படிச் சொல்லவே இல்லை. அந்த வார்த்தைகளை நான் பயன்படுத்தவே இல்லை. வார்த்தைகளை என் வாயில் திணிக்க வேண்டாம். தமிழகத்தில் ஒரு 8 இடங்களைத் தேர்வு செய்து எந்த பிரச்சினைகளுக்காக நான் கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வெற்றி பெற்றேனோ.. அவற்றை அந்த வட்டார மக்களிடம் நினைவூட்டவே இந்த கூட்டங்களை நடத்துகிறோம்.

அந்த பிரச்சினைகள் எழுந்தபோது, முகத்தைக் கூட காட்டாதவர்கள், முணுமுணுக்கக் கூடச் செய்யாதவர்கள் இப்போது அதே பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு பேசுகிறார்கள். உண்மையில் அந்த பிரச்சினைகளில் வென்று கொடுத்த இயக்கம் தான் மதிமுக. தூத்துக்குடியில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் கூட்டத்தை நடத்துகிறோம். ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்துகிறோம். 18 ஆண்டுகளாக நான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி இருக்கிறேன். அந்த பழைய செய்திகளை நான் மக்களுக்கு நினைவூட்டவே அந்த கூட்டத்தை நடத்துகிறோம்.

இன்னொரு உதாரணம் செம்மணி புதைகுழி. இப்போது சில தலைவர்கள் திடீரென இது குறித்துப் பேசுகிறார்கள். அந்த செம்மணி புதைகுழி குறித்து 1998ம் ஆண்டிலேயே நான் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சில் தலைவரிடம் இது குறித்துப் பேசியிருந்தேன். செம்மணி என்ற இடத்தில் சிறுவர்கள் உட்பட 420 தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று, புதைத்துள்ளது. அந்த உண்மைகள் வெளியே வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

ஒசாமா பின்லேடன் விவகாரத்தில் 84 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டு உண்மையை உலகிற்குச் சொன்னீர்கள். அதே குழுவை இலங்கையில் உள்ள செம்மணிக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். நான் சந்தித்த மூன்றாவது நாளே மனித உரிமை கவுன்சில் அந்த குழுவைச் செம்மணிக்கு அனுப்பி வைத்தது. பல எலும்புக் கூடுகளை அங்கிருந்து எடுத்தார்கள். நான் கூறிய குற்றச்சாட்டு உண்மை என்பதே மனித உரிமை கவுன்சில் புரிந்து கொண்டது. அப்போது இது குறித்து யாருமே வாய் திறக்கவில்லை.

செம்மணி புதைகுழி விவகாரத்தை நான் உலகிற்கு வெளிகொண்டு வந்தது 1998. ஆனால், இப்போது திடீரென சிலர் ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்துள்ளார்கள். அதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. இதுபோல நாங்கள் போராடிய பிரச்சினைகள் குறித்தும் அதில் எங்கள் பங்களிப்பு குறித்து விளக்கவே 8 நாள் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.