பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக ஆராய உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழு ஒருவாரத்தில் அறிக்கை அளிக்கும் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கருப்பூரில் செயல்பட்டு வருகிறது பெரியார் பல்கலைக்கழகம். 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பெரியார் பல்கலைக்கழகத்தில், லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியாக கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வுக்கான வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது. இந்தக் கேள்வி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேசிய துணைவேந்தர் ஜெகநாதன் முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாள் பிற பல்கலைக்கழக கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. வினாத்தாள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே படித்து பார்க்கும் வழக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கேள்வி விவகாரத்தில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இதனால் மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், இனிவரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வினாக்கள் இடம்பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், வினாத்தாள் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த வினாத்தாள் விவகாரம் தொடர்பாக உயர் கல்வித்துறை உயர் அலுவலரின் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். அந்தக் குழு அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உயர் கல்வித் துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸை தலைவராகவும், விசாரணை அலுவலர்களாக தனசேகர், விஜயலட்சுமி ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஒரு வாரத்திற்குள் விசாரணை செய்து அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.