நெல்லையில் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

பாப்பாகுடியில் ரஸ்தா எந்த இடத்தில் 17 வயது சிறுவன் ஒருவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார்.

அப்போது அங்கு ஆத்திரத்தில் இருந்த 17 வயது சிறுவன் உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளால் தாக்க முயற்சித்து உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத உதவி ஆய்வாளர் வீட்டுக்குள் இருந்த கழிவறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு ஒளிந்து கொண்டார். ஆனாலும் அச்சிறுவன் ஆத்திரத்தில் அரிவாளால் கழிவறையின் கதவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழிவறையின் கதவு வெட்டுப்பட்டு துண்டானது. இதனால் நிலைகுலைந்த உதவி காவல் ஆய்வாளர் ஒரு கட்டத்தில் தற்காப்புக்காக தன்னிடமிருந்த துப்பாக்கியால் சிறுவனை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அச்சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், சீருடையில் இருக்கும் அதிகாரி ஒருவரிடம் அத்துமீறியதாகவும் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து பெண்களை அவதூறாகப் பேசி தாக்குதல் நடத்தியதாகவும் 11 பிரிவுகளில் அச்சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பாப்பாக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இதை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக திருநெல்வேலி பாப்பாக்குடி காலனி சமத்துவபுரத்தை பூர்வீகமாக கொண்ட, சண்முகசுந்தரம் என்பவரது மகன் சக்திகுமார் (22). தற்போது ரஸ்தாவூர் ஊரில் குடியிருந்து வருகிறார். பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறார்கள், சக்தி குமாரை வரவைத்து சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் நாங்கள் செய்யும் ரவுடித்தனத்தை வெளியில் மற்றும் போலீஸ்க்கு எப்படி தெரிவிக்கலாம் என்று அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சென்றுள்ளனர். இளம் சிறார்களை பிடிக்கும் முயற்சி செய்தபோது இரண்டு சிறார்களும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறை ரஞ்சித் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற உதவி காவல் ஆய்வாளர் முருகனையும், அந்த இரு சிறுவர்களும் சேர்ந்து வெட்ட முயற்சி செய்து உள்ளார்கள்.

தற்காத்துக் கொள்வதற்காக சம்பவ இடத்தின் அருகே இருந்த வீட்டிற்குள் காவல் துறையினர் சென்றனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த சிறுவர்கள் இருவரும் போலீஸார் மீது தாக்குதல் நடத்த கதவை உடைத்துள்ளனர். அந்த வீட்டில் ஒரு பெண்ணும் அவருடைய குழந்தையும் இருந்தனர். இதனால் காவலர்கள் அவர்களை பாதுகாக்க, அந்த சிறுவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது போல் சிறுவன் தாக்கியதில் காயமடைந்த சக்திகுமார், காவலர் ரஞ்சித் உள்ளிட்ட மூவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த சிறுவன் மீது பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பாப்பாக்குடி கிராமம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.