போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு: ஆ. ராசா!

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு என மக்களவையில் திமுக எம்.பி. ஆ. ராசா பேசியுள்ளார்.

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ. ராசா பேசியதாவது:-

பகல்காம் தாக்குதல் குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பேசியதில் பெருமை மட்டுமே வெளிப்பட்டது. அதில் கருத்து இல்லை. எனக்கு இந்தி தெரியாது. புரியவும் செய்யாது. ஆனால் நான் ஒரு இந்தியன். திமுக என்பது தேச ஒற்றுமைக்கான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எங்களை தேச விரோதிபோல சித்தரிக்க முயற்சி நடக்கிறது. பாஜகவினர் எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகின்றனர். அவர்கள் மீது பழிபோடுவதுதான் பாஜகவினருக்கு வாடிக்கை. கடந்த கால ஆட்சிகளை ஒப்பிட்டு மட்டுமே பேசுகின்றனர். நேருவைப் போல ஒரு பிரதமர் யாரும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.

பகல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று கூறிவிட்டால் சரியாகிவிடுமா? பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன? விதி 370 பிரிவைக் கொண்டு வந்த பிறகு காஷ்மீரில் சண்டை இருக்காது, துப்பாக்கிச் சத்தம் இருக்காது என்றெல்லாம் கூறினார்கள். பகல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நாடுகள் ஒன்றுகூட பாகிஸ்தானுக்கு எதிராக பேசவில்லை.

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுகிறார், ஆனால் மத்திய அரசு அதை மறுக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறியது வெட்கக்கேடு. ஒரு இந்திய குடிமகனாக வெட்கப்படுகிறேன். தாக்குதல் தொடர்பாக அமைச்சர்கள் பேசியதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு இல்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை சிதைத்துவிட்டனர். நாட்டிலேயே ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக எங்கள் முதலமைச்சர் பேரணி நடத்தினார். அதை மொத்த நாடும் பின்பற்றியது. நீங்கள் எங்களை இந்தியர்களாக ஏற்றுக் கொள்ளாவிடின் பரவாயில்லை. கார்கில் போரின்போது கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி வழங்கியது.

அமெரிக்க துணை அதிபர், இந்தியப் பிரதமரை அழைத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடக்கப்போவதாகக் கூறுகிறார். இது உங்களுக்கு வெட்கம் இல்லையா?

கார்கில் போரின்போது வாஜ்பாய் ஒரு விசாரணைக்குழுவை அமைத்து அறிக்கையை நாடளுமன்றத்தில் வழங்கினார். குறைந்தபட்சம் உங்கள் தலைவர் வாஜ்பாயின் வழிமுறைகளையாவது பின்பற்றுங்கள். பகல்காம் தாக்குதல் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. தாக்குதல் முடிந்துவிட்டதாக ஒரு அமைச்சரும் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அமைச்சரும் கூறுகிறார். இதில் எது உண்மை? இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாறுபட்ட தகவல்களை வெளியிடுகிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறுகிறீர்கள். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்கான) பாகிஸ்தானை இணைக்கிறார்கள். இதைக் கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா. ஜனநாயக வழியில் எல்லாவற்றையும் ஆக்கபூர்வமாக கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.