இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்த பாஜகவின் மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவை படுகொலை செய்ய சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நபர் ராஜஸ்தானில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நபிகள் நாயகத்தை நுபுர் சர்மா, டிவி விவாதம் ஒன்றில் அவதூறாக பேசிய விவகாரம் சர்வதேச பிரச்சனையானது. இதனையடுத்து நுபுர் சர்மா, பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்தன. மேலும் நுபுர் சர்மாவை ஆதரித்த நபர் ராஜஸ்தானில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் நுபுர் சர்மாவை மிக கடுமையாக விமர்சித்தது. இதற்கு எதிராக தம்மை பற்றி நீதிபதி தெரிவித்த கருத்துகளை வாபஸ் பெறக்கோரி நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அத்துடன் தம் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க கோரியும் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார் நுபுர் சர்மா.
இந்நிலையில் ராஜஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய ஒருநபரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த நபரிடம் 11 அடி நீள கத்தி, மதம் சார்ந்த புத்தகங்கள், உணவுப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விசாரணையின் போது, நபிகள் நாயகத்தை விமர்சித்த நுபுர் சர்மாவை படுகொலை செய்ய தாம் திட்டம் தீட்டியதாகவும் அஜ்மீர் சென்றுவிட்டு பின்னர் நுபுர் சர்மாவை கொலை செய்ய முடிவு செய்திருந்ததாகவும் கூறியிருக்கிறார் அந்த நபர். இதனையடுத்து அந்த நபர் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் இருந்து நுபுர் சர்மாவை படுகொலை செய்ய திட்டத்துடன் ஊடுருவிய அந்த நபரிடம் ஐபி, ரா உள்ளிட்ட மத்திய ஏஜென்சி அமைப்பினரும் விசாரித்து வருகின்றனர்.