முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கே போய் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை நலம் விசாரித்தார். முதல்வர் ஸ்டாலின் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது தேறியுள்ள நிலையில் நேரில் சந்தித்தார் பிரேமலதா.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், மூன்று நாட்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை தலைமைச் செயலகம் செல்வதற்கு முன்னதாக, தனது வீட்டுக்கு வருகை தந்த பிரமலதா விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். மேலும், அண்மையில் மறைந்த மு.க.முத்து மறைவுக்கும் ஆறுதல் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு, தேமுதிக பொருளாளார் எல்.கே சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கடந்த தேர்தல்களில் பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்ட நிலையில், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பையும் தேமுதிக வெளியிடவில்லை. வரும் ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்படும் என பிரேமலதா கூறி வருகிறார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.