தமிழ்நாட்டில் 2026-ல் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை: திருமாவளவன்!

1967, 1977-ல் நடந்தது போல தமிழ்நாட்டில் 2026-ல் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை என்றும், 2026-ல் யார் தேவை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் நகர்ந்து வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி நேற்று மை டிவிகே ஆப் செயலியை விஜய் அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், 1967, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் நடந்தது போல வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று பேசியிருந்தார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

அது விஜய்யின் விருப்பமாக இருக்கலாம்.. இப்போது கள நிலவரம் அவர் சொல்வது போல் இல்லை.. எம் ஜி ஆர் காலத்தில் இருந்ததை போன்ற சூழல் அதற்கு பிறகு இருந்தது கிடையாது. அடுத்தடுத்து எத்தனையோ திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வந்தார்கள். பெரும் செல்வாக்கோடு அவர்கள் வந்தனர். ஆனால் மக்கள் அவர்களை இலகுவாக ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு இப்போது திரைப்படங்களை நம்பி தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய மாநிலம் என்று விமர்சித்த காலம் மாறிப்போய்விட்டது. அரசியல் விழிப்புணர்வு உள்ள ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் வளர்ச்சியடைந்துவிட்டது. யார் தேவையோ அவர்களை மக்கள் தேர்வு செய்வார்கள். 2026 தேர்தல் இதனை நமக்கு உணர்த்தும். இவ்வாறு அவர் கூறினார்.