தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பிரஜ்வல் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் மீது புகார் இருக்கிறது. இதன் அடிப்படையில் 4 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இவர் எம்பியாக இருந்த ஹசன் தொகுதியில் இவருக்கு சொந்தமாக பண்ணை வீடு இருக்கிறது. பண்ணை வீட்டில் வைத்து 48 வயது மதிக்கத்தக்க பணிப்பெண்ணை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த புகார் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிஐடி சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்ததாக ரேவண்ணா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008 ஆகியவற்றின் கீழ் பல பிரிவுகளின் கீழ் பிரஜ்வல் மீது வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி விசாரணை தொடங்கியது. விசாரணை தொடங்கி 14 மாதங்களில், இந்த வழக்கில் 113 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு 1,632 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜூலை 18ம் தேதி விசாரணை முடிந்தது. ஜூலை 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக தீர்ப்பு ஆக.1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பில் பிரஜ்வல் குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பின் போது பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் போதும் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி காணப்பட்டார். தண்டனையின் அளவு குறித்த தீர்ப்பை நீதிமன்றம் இன்று பிற்பகல் அறிவிக்க உள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரிவுகளில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376(2)(k) மற்றும் 376(2)(n) ஆகியவற்றிற்கு குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். மற்ற பிரிவுகளான 354(A), 354(B), 354(C) ஆகியவை மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும். பிரிவு 506-க்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், பிரிவு 201-க்கு ஒரு வருடம் முதல் ஏழு ஆண்டுகள் வரையிலும் தண்டனை விதிக்கப்படலாம். தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008-ன் பிரிவு 66(E) மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.