அதிமுக முன்னாள அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ திட்டமிட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களது குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் சென்னையில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம், பான் மசாலா விற்பனை செய்வதற்காக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து அந்த டைரி தகவலை டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர். அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் குட்கா பணப்பரிமாற்றம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
இதையடுத்து குட்கா விற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், எனவே இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அதன் பேரில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டனர். அடுத்தடுத்து நடந்த அதிரடி நடவடிக்கைகளால் குட்கா விற்பனையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. குறிப்பாக அப்போதைய அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர்கள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.
தற்போது இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. முன்னாள் டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றால், அதற்கு தலைமை செயலாளர் அனுமதி வேண்டும். இதன் காரணமாக தற்போது அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 6 பேருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு விரைவில் இதற்கு அனுமதி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.