மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்கு அழைத்துவர பாஜக முயற்சிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

விலக வேண்டிய முடிவை எடுக்கத் தள்ளப்பட்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகி இருப்பது தனிப்பட்ட முறையில் வருத்தம் அளிப்பதாகக் கூறிய டிடிவி தினகரன், மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்கு அழைத்துவர பாஜக முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் கடைசி வரை ஓபிஎஸ் தரப்பை சந்திக்க மோடி ஒப்புதல் அளிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோரை மட்டும் திருச்சி விமான நிலையத்தில் மோடி சந்தித்தார். இதனால் அதிருப்தி அடைந்த, பாஜக கூட்டணியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்தார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஓபிஎஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். பின்னர் பாஜகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு, நேராக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் மோதலில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் பாஜக கூட்டணி வலுவிழந்து காணப்படுவதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:-

அண்ணன் ஓபிஎஸ் இதுபோன்ற முடிவை எடுத்தது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த முடிவுக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டிருக்கக் கூடாது என்பதே எனது கருத்து. அவர் அந்த முடிவை எடுக்கத் தள்ளப்பட்டதற்கு யார் காரணம் என்பது உலகத்திற்கே தெரியும். அதனை நாம் டீகோட் செய்யத் தேவையில்லை. ஓபிஎஸ் தரப்பை மீண்டும் சமாதானப்படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதே டெல்லி பாஜக தலைமைக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.

ஓபிஎஸ்-ன் ஆதங்கம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். அவரை எங்கள் கூட்டணி கொண்டு வர பாஜக தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். நான் ஓபிஎஸ் உடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். டெல்லியில் உள்ள பாஜக நிர்வாகிகளுக்கும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். கடந்த 7 ஆண்டுகளாக பாஜக கூட்டணியிலும், அக்கட்சித் தலைவர்களுடனும் நல்ல உறவில் இருந்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.