அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைகிறேனா?: ஜெயக்குமார் விளக்கம்!

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய போகிறேனா? என கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஷாக் பதிலை கொடுத்துள்ளார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருந்தனர். இரட்டை தலைமை இருப்பதால் ஒருமித்த முடிவுகளை எடுக்க முடியாமல் போனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் வேட்பாளர் தேர்வுகளிலும் இரு தலைவர்களின் ஆதரவாளர்களில் யாருக்கு சீட்டு என்ற பஞ்சாயத்து நடந்தது. மேலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது ஒருவர் உடன்படுவதும், இன்னொருவர் எதிர்ப்பதுமாக இருந்தனர். இதனால் அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் சரி என நிர்வாகிகள் முடிவு செய்தனர். மேலும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை ஓபிஎஸ் புகழ்ந்து பேசியது கட்சி நிர்வாகிகளுக்கு கோபத்தை வரவழைத்தது. இதனால் ஒற்றைத் தலைமை, அது எடப்பாடி பழனிசாமியின் தலைமைதான் என முடிவு செய்தனர்.

அப்போது மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டது முதல் மீடியாக்களை சந்தித்து பேசி வந்தவர் ஜெயக்குமார்தான். இவரிடம் எந்த கேள்வியை கேட்டாலும் கோபமே படமாட்டார். அதற்கேற்ப நகைச்சுவையாக பதில் சொல்வதில் வல்லவர். அது போல் வடசென்னையில் முக்கிய முகமாக இருப்பவரும் இவர்தான். ஒற்றைத் தலைமை வேண்டும் என தைரியமாக குரல் கொடுத்தவரும் ஜெயக்குமார்தான். அது போல் கடந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது என்ற செய்தியை சொன்னவரும் இவர்தான். இந்த நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜகவால்தான் நான் தோல்வி அடைந்தேன் என்பதையும் ஜெயக்குமார் மிகவும் காட்டமாக விமர்சித்தார்.

இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜெயக்குமார் ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். கூட்டணி குறித்து ஒரு வார்த்தை கூட எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை. ஆனால் வழக்கம் போல கட்சி நிகழ்ச்சிகளில் அவர் தவறாமல் கலந்து கொள்கிறார். அதிருப்தியில் இருக்கும் ஜெயக்குமாரை சமாதானம் செய்ய அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி தரப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரவில்லை. தனது ஆதரவாளர்கள் பலர் எம்எல்ஏக்களாகவும், எம்பிக்களாகவும் இருந்து வரும் நிலையில் தனக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படவில்லையே என எடப்பாடி பழனிசாமி மீது ஜெயக்குமார் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியால் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அந்த வகையில் பாஜக கூட்டணியால் அதிருப்தியில் உள்ள ஜெயக்குமாரும் விரைவில் திமுகவில் இணைவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த தகவலுக்கு ஜெயக்குமார் மறுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், “திமுகவில் இணைய போவதாக என்னை பற்றி வதந்தி பரப்பி வருகிறார்கள். நடக்காத ஒரு விஷயத்தைப் பற்றி பேசி வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும் நான் மானஸ்தன் என்று! யாருடைய வீட்டின் முன்பும் சென்று பதவிக்காக நிற்கும் ஆள் நான் இல்லை. நான் திராவிட பாரம்பரியத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியை ஏற்று வந்தவன். என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமாகும். உடல் மண்ணுக்கு உயிர் அதிமுகவுக்குத்தான். ஆகவே என்னை பற்றி வதந்தி பேசும் யூடியூபர்கள், சில செய்தி சேனல்கள் குறித்து நான் கவலைப்படவில்லை” என கூறினார்.