அதிமுக அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 11 ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்கள், உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இதனால், ராயப்பேட்டை முழுவதும் வன்முறைக் கலவரமாக மாறியது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களை காட்டி, அதிமுக அலுவலகத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் உத்தரவை நீக்கி தங்களிடம் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது. இதேப் போல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். இதை அடுத்து வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார், அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்ற வேண்டும் என்றும், அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில், தனது கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்கக் கூடாது என கூறிய நீதிபதி சதீஷ் குமார், அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல் துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இது குறித்து பேசிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், அதிமுக அலுவலக உரிமை தொடர்பானது பற்றி ஆராயாமல் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு என்றும், இந்த வழக்கின் உத்தரவு மேல்முறையீடு செய்ய தகுதி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு எதிராக உள்ளது. இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.