சிவகங்கை அருகே உள்ள நாட்டாகுடி கிராமத்தில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தண்ணீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால், அந்த கிராம இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன் வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கிராம மக்கள் சிவகங்கை நகர்ப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். ஆனால் அந்த கிராமத்திற்கு நீண்ட காலமாக குடிநீர் வசதி, சுகாதார சேவைகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தில் வசித்து வந்த பொதுமக்கள் பல்வேறு அவதிகளைச் சந்தித்து வந்துள்ளனர்.
குடிநீருக்கு கூட பக்கத்துக் கிராமம் வரை செல்லும் நிலை இருந்திருக்கிறது. அதேபோல் பள்ளிக் கூடத்திற்கும் வேறு கிராமத்திற்கு குழந்தைகள் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. வேலைவாய்ப்பும் இல்லாததால் இளைஞர்கள் படித்துவிட்டு வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். அதுமட்டுமல்லாமல் சுகாதார வசதிகள், மருத்துவமனைகள் இல்லாததால் நோய்த் தொற்று, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன.
குறிப்பாக இந்த கிராமத்தில் இருக்கும் பெண்களை திருமணம் செய்யவும், இளைஞர்களுக்குப் பெண் கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் சிவகங்கை நகர்ப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வாடகை வீடுகளில் வசிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதனிடையே கடந்த வாரம் தனது நிலத்தைப் பார்த்துவிட்டு வீட்டிலிருந்த ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் கிராம மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் எஞ்சிய மக்களும், உடனடியாக கிராமத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். இதனால் நாட்டாகுடி கிராமத்தில் ஒரேயொருவர் மட்டுமே வசித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரேயொருவர் மட்டுமே கிராமத்தில் வசித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சொந்த வீடு, நிலம், விவசாயம், உறவினர்களை விட்டு அனைவரும் வெளியேற அந்த கிராமத்தில் போதுமான வசதிகள் இல்லாததே காரணமாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
5 ஆயிரம் பேர் வாழ்ந்த நாட்டாகுடி கிராம், தற்போது ஒருவர் மட்டும் வாழும் கிராமமாக மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ. 4,835 கோடிக்கு மேல் வழங்கியுள்ளது, ஆனாலும், குடிநீருக்காக மக்கள் போராடும் நிலை உள்ளது. நாட்டாகுடி கிராமத்தை உள்ளடக்கிய சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாத்தூர் கிராம பஞ்சாயத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100% குழாய் நீர் இணைப்பை கொடுத்துள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல, துரோகம். இது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் நிர்வாக அலட்சியத்தின் வெளிப்படையான அடையாளமாகும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
