தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது: சீமான்!

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை பேய், பிசாசு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

மதுரையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்கிறார்கள். அடுத்த முறை பிசாசை விவாகரத்து செய்துவிட்டு பேயை 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்கிறார்கள். அதாவது அதிமுக வரக் கூடாது என திமுகவுக்கும், திமுக வரக் கூடாது என அதிமுகவுக்கும் மக்கள் வாக்களிக்கிறார்கள். கூட்டணிக்கு சென்ற விஜயகாந்தின் தேமுதிகவுக்கு என்ன நடந்தது? 10 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் திடீரென சரிந்ததற்கு காரணம் கூட்டணி வைத்ததுதான். அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சரிவுக்கும் அதுதான் காரணம். அதிமுகவை வைத்து திமுகவை எப்படி ஒழிக்க முடியும்? தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது. மக்கள் விழித்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும்.

அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார், அண்ணா வழியில்தான் 60 ஆண்டுகளாக திமுக பயணிக்கிறது.
அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் திமுக, அதிமுக பயணிக்கிறது. அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்? விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது வந்துவிட போகிறது. திரை வெளிச்சத்தில் அவ்வப்போது சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.