நீட் தேர்வு மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம்: மேலும் இருவர் கைது!

கேரளத்தில் நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றச் சொன்ன சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வினை எழுதினர். கேரளத்தில் கொல்லம் மாவட்டம் அயூர் பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு தேர்வு மையத்தில் சோதனையின்போது, மாணவிகளின் உள்ளாடைகளில் உள்ள கொக்கிகள் மூலம் சத்தம் வந்துள்ளதால் அதனை கழற்றச் சொல்லியுள்ளனர் பரிசோதகர்கள். இதனால் அந்த மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்டவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகள் ஆணையமும் இதுகுறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வித் துறை அமைத்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஏற்கெனவே அங்கு பரிசோதனையில் ஈடுபட்ட தேசிய தேர்வு முகமையின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 3 பெண்கள், அயூர் தனியார் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் 2 பெண்கள் என 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தேர்வு பார்வையாளர் டாக்டர் ஷம்நாத் மற்றும் தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரிஜி குரியன் ஐசக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.