காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

திருப்பூர் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ் ஐ அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன. காவல் நிலையத்தில்கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்?

விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?

முதல்வர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும், இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான திசைதிருப்பும் உத்தி மட்டுமே. ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம். மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே. மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.