எடப்பாடி பழனிசாமி 11வது முறையாகவும் தோல்வியை சந்திப்பார்: செந்தில் பாலாஜி!

தமிழ்நாட்டில் இதுவரை 10 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி, இனி 11வது முறையாகவும் தோல்வியை சந்திப்பார் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுக சார்பாக ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் மூலமாக சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொரு பூத்திலும் 30% வாக்காளர்களை சேர்க்க திமுக இலக்கு நிர்ணயித்த நிலையில், செந்தில் பாலாஜி 40% இலக்கை உயர்த்தினார். இதனால் கொங்கு மண்டலத்தில் இம்முறை கடந்த முறையை விடவும் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கேற்ப அடுத்ததாக ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது 2 மாவட்டங்களுக்கும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. அதில் விண்ணப்பம் கொடுத்து தீர்வு காணப்பட்ட பயனாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சான்றிதழ் வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து செந்தில் பாலாஜி கூறியதாவது:-

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுக தரப்பில் மகளிருக்கு உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அதற்கு போட்டியாக அதிமுக தரப்பில் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுகவின் வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல், திமுகவுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள். மகளிர் உரிமைத் தொகை விஷயத்தில் தற்போது விடுபட்டவர்களுக்கும் முகாம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே தேர்தல் களம் நெருங்குவதால், முன்கூட்டியே வாக்குறுதியை அளிக்க தொடங்கி இருக்கிறார்கள். அப்படியாவது மக்களிடத்தில் வரவேற்பைப் பெற முடியுமா என்று முயற்சிக்கிறார்கள்.

ஒரு தொகுதியில் ஒரு இடம் அல்லது 2 இடத்தில் கூட்டம் நடக்கிறது. சாதாரணமாக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூடுகிறார்கள். 5 ஆயிரம் வருகிறார்கள் என்று கூட வைத்துக் கொள்வோம். ஆனால் ஒரு தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் உள்ளன. 3 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் இடத்தில் 3 ஆயிரம் பேர் கூடுவதை சிலர் பெரிதுபடுத்தி காட்டுகிறார்கள். மக்களின் மனநிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசாக தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும் கூட, மாநில அரசின் நிதியை மூலம் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளார். அதனால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக ஓராண்டுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி கொடுத்தாலும், அதனை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதுவரை 10 தேர்தலில் தோல்வியடைந்த பழனிசாமி, இனி 11வது முறையாகவும் தோல்வியை சந்திக்க உள்ளார். மக்கள் அதனை தான் எதிர்க்கட்சித் தலைவருக்கு பரிசாக அளிக்கப் போகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.