டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் நடந்துவரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான மக்களின் கோரிக்கைகளை தெரிவித்தார். மேலும், கூட்டணி நிலவரம் குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். அண்ணாமலைக்கு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கட்சி வட்டாரத்தில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், அண்ணாமலை நேற்று விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னை வந்து, பின்னர் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடந்து வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக அப்பகுதி கிராம மக்களின் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தார். அப்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய தேசிய தலைவர்களையும் அண்ணாமலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, அண்ணாமலைக்கு வழங்கப்பட இருக்கும் தேசிய அளவிலான பொறுப்பு, தமிழக அரசியல் நிலவரம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி விவகாரங்கள், பிரதமரின் திருவண்ணாமலை பயணம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணாமலை எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
இன்றைய தினம், புதுடெல்லியில், நமது மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை, நமது மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு எல். முருகன் அவர்களுடன் சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதற்கு, எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
இந்தச் சந்திப்பில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அக்கா திருமதி dk.சரஸ்வதி அவர்கள், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் திரு SM செந்தில் அவர்கள், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் திரு. வேதானந்தம் அவர்கள் மற்றும் திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களிடம், நமது விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பாக, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 381A ல் திட்டமிடப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகளை, பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மறுபரிசீலனை செய்ய, தாழ்மையுடன் கோரிக்கை வைத்தோம்.
தேசிய நெடுஞ்சாலை எண் 381A ல், தற்போதைய திட்டப்படி சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, நஞ்சை ஊத்துக்குளி, கருந்தேவன்பாளையம், சின்னியம்பாளையம், முத்துகவுண்டன்பாளையம், உஞ்சப்பாபாளையம், எம்.வேலம்பாளையம், ஆவரங்காட்டு வலசு, அய்யகவுண்டன் பாளையம், மேட்டுப் பாளையம், முத்தையன் வலசு, எல்லாக்கடை, பாரப்பாளையம், T.R. புதூர், விஜய நகரம், உச்சிமேடு மற்றும் மொல்லப்பாளையம் போன்ற பல கிராமங்கள் வழியாக செல்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளக்கோவில், சேனாதிபாளையம், வேலம்பாளையம், மேட்டுப்பாளையம், சின்னமுத்தூர் உள்ளிட்ட கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன.
மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி
அவர்களிடம், இவை குறித்த பொதுமக்களின் கவலைகளைத் தெரிவித்தபோது, அவர் மிகுந்த பொறுமையுடன் அனைத்தையும் கேட்டும் கொண்டார். மேலும் பொதுமக்களின் நெடுஞ்சாலை மறுசீரமைப்பு கோரிக்கை தொடர்பாக மறுஆய்வு செய்து பதிலளிப்பதாக உறுதியளித்திருக்கிறார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
