டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசு அளவை வைத்து பட்டாசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் இருந்திருந்தால் தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்கலாம், என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” சுற்று பயணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சிவகாசி வட்டார பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் உற்பத்தியாளர்கள், அச்சகம், பேப்பர் மெர்சென்ட் உரிமையாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அவர் கூறியதாவது:-
பட்டாசு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அரசு குறிப்பிட்ட அளவு தான் செயல்பட வேண்டி உள்ளது. பல தீர்ப்புகள் அரசுக்கு எதிராக வருகிறது. பட்டாசு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், சிறப்பு வழக்கறிஞரை நியமித்து வாதடியது அதிமுக அரசு.
டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசுவை வைத்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச நீதிமன்றம் இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கலாம். தமிழகத்தை சேர்ந்தவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி உள்ளதால் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம். சிவகாசியில் ரூ.10 கோடியில் தீக்காய சிகிச்சை பிரிவு, விருதுநகரில் ரூ.350 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி அமைத்தோம்.
பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் ஆட்சி மாற்றம் வந்த உடன் நாங்கள் கண்ட கனவுகள் எல்லாம் காணல் நீராக மாறிவிட்டது. இப்போது மருத்துவமனைகளில் மருத்தவர்கள், மருந்துகள் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் 12 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி பெற்று தந்த நிலையில், நிலம் கையகப்படுத்தப்படாததால் அத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தொழில் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் முக்கியம். பட்டாசு தொழிலுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், அதிமுக எம்.பிக்கள் மூலம் மாநிலங்களவையிலும், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
அதிமுக ஆட்சி அமைந்த உடன் பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளுக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். மேலும் பட்டாசு தொழில் பிரச்சினை இல்லாமலும், அதே நேரம் பாதுகாப்பாகவும் நடக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
